சர்வதேச மருத்துவ மாது தினம் குறித்த நேர் காணல்
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
[மெர்லின்" (MERLIN) நிறுவனத்தின் சுகாதார மற்றும் கொள்கைப் பணிப்பாளரான லின்டா டூல் உடன் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்]
சர்வதேச மருத்துவ மாது தினம் கடந்த ஐந்தாம் திகதி, உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது. லண்டனில் உள்ள “மெர்லின்” (MERLIN) நிறுவனமானது, “அனைத்து அன்னையரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்” என்னும் தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டது.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் பிரசவத்தின் போது 50மூ கர்ப்பிணிப் பெண்கள் மரணமடைகின்னறனர். புல நாடுகளில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவ மாது காணப்படுவதாக “மெர்லின்” குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, “மெர்லின்” (MERLIN) நிறுவனத்தின் சுகாதார மற்றும் கொள்கைப் பணிப்பாளரான லின்டா டூல் உடன் நடத்திய நேர்காணல் பின்வருமாறு:
1. சர்வதேச மருத்துவ மாது தினத்தின் முக்கியத்துவம் யாது?
பதில்: சர்வதேச மருத்துவ மாது தினத்தின் முக்கியத்துவத்தை இரு வகைப்படுத்தலாம்.
கர்ப்ப காலத்தின் போது மருத்துவ மாதுக்கள், கர்ப்பிணிகள் மீது செலுத்தும் கவனம் பற்றியது.
கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது இறப்பு தொடர்பானது. அதாவது, கர்ப்ப காலத்தின் போது மருத்துவ மாதுக்களின் உதவியைப் பெறக் கூடியதாகவிருப்பின், பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் இறப்பதை 75மூ ஆல் குறைக்கலாம்.
2. இவ் வருட சர்வதேச மருத்துவ மாது தினத்தின் முக்கியமான தகவல் யாது?
பதில்: இந்த வருட சர்வதேச மருத்துவ மாது தினத்தின் முக்கிய தகவல் யாதெனில், உலக ரீதியாகச் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு பற்றியதாகும். முக்கியமாக உப சகாரா ஆபிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக, மேலும் பெருந்தொகைப் பணத்தை மருத்துவ மாதுகளுக்காக முதலீடு செய்வதன் மூலமாக, பிரசவ காலத்தின் போது பெண்கள் மரணமடைவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பல கர்ப்பிணிப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?
பதில்: கர்ப்ப காலத்தின் போது பயிற்சி பெற்ற மருத்துவ மாதுக்களின் உதவிகளைப் பெறுவதற்குக் கர்ப்பிணிகளுக்கு வசதியளிக்கப்பட வேண்டும். அத்துடன், கர்ப்ப காலத்தின் போது அவசியமான பராமரிப்பு அவ்வப்போது வழங்கப்பட வேண்டும். பிரசவத்தின் போது மருத்துவ மாது அருகில் இருக்க வேண்டியதும் இன்றியமையாததாகும். மேலும் இக் கர்ப்பிணிப் பெண்கள் தமது போஷாக்கில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, இலங்கை போன்ற நாடுகளில் கர்ப்ப காலத்தின் போது மலேரியா போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று, இப் பெண்கள் மருத்துவ மாதுக்களின் உதவியைப் பெற முடியுமாயின், தமக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் சகல உதவிகளையும் பெறக் கூடியதாகவிருக்கும்.
4. “அனைத்து அன்னையரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்” என்னும் அறிக்கையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
பதில்: இந்தப் புதிய அறிக்கையானது, மருத்துவ மாதுக்கள் பற்றாக்குறையாக உள்ள நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இலங்கையில், பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் இறக்கும் சதவீதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை ஓர் சிறந்த உதாரணமாகும். ஆயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் நிலைமை வித்தியாசமாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் அவ்வப்போது வழங்கப்படுவது அத்தியாவசியமானது.
5. அவசர நிலைமைகளின் போது கர்ப்பிணிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் எவை?
பதில்: இவ்வாறான நிலைமைகளில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவான மனவழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அவசர நிலைமைகளில் கூடக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான போஷாக்குள்ள உணவு, சுத்தமான குடிநீர், வதிவிடம் என்பன கிடைப்பது அவசியம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், சுகாதாரப் பணியாளர்களுக்கும் தட்டுப்பாடு நிலவலாம். ஏனெனில், இப் பிரதேசங்கள் பாதுகாப்பற்றவையாகவோ அல்லது ஏற்கனவே உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான தேவை அதிகமானதாகவோ காணப்படலாம். இருப்பினும், இவ்வாறான அவசர நிலைமைகளின் போது கூட, கர்ப்பிணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான பயிற்றப்பட்ட மருத்துவ மாதுக்கள் இருக்க வேண்டும். அத்துடன் இப் பெண்கள் தமக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் பெறுவதோடு, இளைப்பாறுவற்கான இட வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
6. மோதல் நடைபெறும் பகுதியில் பணியாற்றும் மருத்துவ மாதிற்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?
பதில்: உலக ரீதியாக மோதல் நடைபெறும் நாடுகளிலிருந்து பல்வேறு அனுபவங்கள் பெறுப்பட்டுள்ளன. மோதல் நடைபெறும் பிரதேசத்தில் முறையாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்திலோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களிலோ இம் மருத்துவ மாதுக்கள சுகாதாரமான உதவிகளை வழங்கலாம். இவ்வாறான உதவிகளை மனிதாபிமான ரீதியான உதவியாகக் கருதி முன்னுரிமை கொடுப்பது அவசியம்.
7. மோதல் நடைபெறும் பிரதேசங்களில் வாழும் கர்ப்பிணிப் பெண்களை எவ்வாறு கையாள வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு நீங்கள் கூறும் ஆலோசனை யாது?
பதில்: இலங்கை அரசாங்கமானது, கர்ப்பிணித் தாய்மாரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பாரிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், மில்லேனியம் அபிவிருத்தி குறிக்கோளுக்கிணங்க, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் தேவையான வசதிகள் கிடைக்கப்பெறுவதற்கு எற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் பிரதேசங்களில் தேவைப்படும் பயிற்றப்பட்ட மருத்துவ மாதுகளுக்கான முதலீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
In English: Prophesied gains in reducing maternal deaths in Sri Lanka